பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரூ.14 கோடியில் மேம்பாட்டு பணி: ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரூ.14.15 கோடியில் மேம்பாட்டு பணிகளை ஆகஸ்டுக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தின்கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய17 நிலையங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், குரோம்பேட்டை, திரிசூலம் தவிர, மற்ற ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்துவருகின்றன.அந்த வகையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரூ.14.15 கோடி மதிப்பில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பரங்கிமலை ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி மேம்படுத்தப்பட உள்ளது.
பேருந்து நிறுத்த பகுதியின் அருகே நுழைவு வளைவு, புதிதாக 3 டிக்கெட் பதிவு அலுவலகங்கள், பயணிகள் நடந்து செல்ல வசதியாக பாதசாரிகள் பிளாசா, கூடுதல் நடைமேடை, பயணிகள் தங்கும் வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள், புதிய டிக்கெட் பதிவு அலுவலகங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அனைத்து பணிகளையும் ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்து ஆகிய வசதிகளை எளிதாக பெறும் மையமாக பரங்கிமலை ரயில் நிலையம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
