Published : 09 Apr 2018 08:56 AM
Last Updated : 09 Apr 2018 08:56 AM

தொழிலாளர்களை வஞ்சித்து பெருநிறுவனங்களை வளர்க்கிறது பாஜக: சென்னையில் நடந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

தொழிலாளர்களை வஞ்சித்து, பெருநிறுவனங்களை வளர்ப்பதிலேயே பாஜக அரசு குறியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த அரசு ஊழியர் தேசிய மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16-வது தேசிய மாநாடு சென்னையில் கடந்த 5-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இறுதி நாளான நேற்று, புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அங்கு மாநாடு நடைபெற்றது.

இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து, சாதி மற்றும் மதத்தின் பெயரால் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைக்கின்றனர். இதனால், உழைக்கும் வர்க்கம் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறது. இது தேசிய நலனுக்கு உகந்ததல்ல.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றல், அந்நிய நேரடி முதலீடு, அரசுப் பணியில் காலிப்பணியிடங்களை ஒப்பந்தம், வெளிமுகமை மூலமாக நிரப்புவதால் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது.

காங்கிரஸ் அரசு பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவில்லை. பாஜக அரசு பொருளாதார வளர்ச்சியை புறக்கணித்துவிட்டது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியன பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளன. தொழிலாளர்களை வஞ்சித்து, பெருநிறுவனங்களை முன்னேற்றுவதிலே பாஜக அரசு குறியாக இருக்கிறது. எனவே, பாஜவுக்கு எதிரான போராட்டத்தைத் நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், டி.கே.ரங்கராஜன் எம்பி, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் ஆகியோர் பேசினர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு வரவேற்றார். நிறைவில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.ஞானத்தம்பி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x