

ஓபிசி மக்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விசிக விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் விமரிசையாக நடைபெற்றது. இதில், நடிகர் பிரகாஷ்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கிய விசிக தலைவர் திருமாவளவன் விழா பேருரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது: விழாவுக்கு 80 பேர் நிதி வழங்கிஉள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல்கொடையளித்தவர்களுக்கு விரைவில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் பெயரில் விருது வழங்க வேண்டும் என அருள்மொழி கோரிக்கை விடுத்தார். பெண்களைவிசிக ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
இந்த கோரிக்கையையும் பரிசீலிப்போம். பெண்கள், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர் அரசியல்படுத்தப்பட வேண்டும் என அனைவரும் பொதுவாக பேசுவார்கள். ஆனால் அதில் இருந்து விசிக மாறுபட்டு, ஓபிசி மக்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும் என்பதை உயர்த்தி பிடிக்கிறோம்.
வேங்கைவயலில் இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் நடைமுறைப்படுத்துபவர்கள் யார்? மோடி யார்? அமித்ஷா யார்? அண்ணாமலை யார்? இதை நியாயப்படுத்தக் கூடியவர்கள் யார்? திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி அரசியலில் ஈடுபடும் ஆளுநருக்கு ஆதரவாக பேசுவோர் யார்? இவ்வாறு சனாதனத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர்கள் அல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, அவர்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும்.
விபி சிங் ஆட்சியில் ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்பதற்காக அந்த ஆட்சியையே கவிழ்த்த கும்பலோடு பாமகவால் உறவாட முடிகிறது என்றால் அரசியல்படுத்தப்பட வேண்டியவர்கள் விசிகவினரா, பாமகவினரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சனாதன சக்திகள் இந்துஎன்ற போர்வைக்குள் மறைந்திருக்கின்றனர். இதை உணர்ந்து போராடமுத்தரசன், அருள்மொழி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தேவை.
தேர்தல் வெற்றி, தோல்வி பொருட்டல்ல. நட்பு சக்திகளை ஒருங்கிணைப்பதும் பகை சக்திகளை வீழ்த்துவதுமே முக்கியமானது. இதை உணர்ந்து இடதுசாரி, பெரியாரிய இயக்கங்களோடு இணைந்து விசிக இயங்குகிறது என்பதை பெருமையுடன் சொல்கிறேன். நாம் பேசும் அரசியல் நீர்த்துபோகக் கூடாது. இடதுசாரிகளுடனான விசிகவின் உறவை நீர்த்து போக விடமாட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என கருத முடியாது. சனாதன சக்திகளால் ஆயிரக்கணக்கான மோடிகளை உருவாக்க முடியும். உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் கூட பிரதமரின் இடத்தில் வந்து அமர வாய்ப்புள்ளது. நரேந்திர மோடியை விட பன்மடங்கு சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிப்பவர் அவர்.
பவுத்த ராஷ்டிரம்: இத்தகைய நபர்களை நாடு முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அவர்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கின்றனர். இந்து ராஷ்டிரத்தை உருவாக்க நினைக்கின்றனர். ஆனால் அரசமைப்புச் சட்டமோ பவுத்த ராஷ்டிரத்தை உருவாக்கும் அடித்தளத்தை கொண்டிருக்கிறது.
இதை அழித்தொழிப்பதே மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் நோக்கம். ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவு என்பது இறுதி முடிவல்ல. இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாலும் ஜனநாயக இந்தியாவை கட்டமைப்பதற்கான வெற்றியாக அமையாது.
சனாதன சக்திகளை தலையெடுக்க விடாமல் தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சியின் மறுசீரமைப்பு பணியில் கவனம் செலுத்துவோம். களப்பணிகளை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.