ஜெ. பற்றிய அவதூறு செய்தி: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்ச

ஜெ. பற்றிய அவதூறு செய்தி: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்ச
Updated on
2 min read

இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கட்டுரை தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச வருத்தம் தெரிவித்தார்.

தலைநகர் கொழும்பில் நிருபர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ராஜபக்ச, ‘இப்படி நிகழ்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அறிக்கை தரும்படி கேட்டுள்ளேன்’ என்றார்.

நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்த முடையவை என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கடந்த 1-ம் தேதி கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சித்திரமும் இடம்பெற்றிருந்தன. இந்த கட்டுரை ஜெயலலிதாவையும் மோடியையும் இழிவு செய்வதாக இருந்தது.

இதற்கு இந்தியாவில் பலத்த கண்டனம் எழுந்ததால் பாதுகாப்பு அமைச்சகம், இணைய தளத்திலிருந்து அந்த கட்டுரையை உடனடியாக நீக்கியது. இந்தியாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியது.

பிரதமரிடமும் தமிழக முதல்வரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை தெரிவித்தது.

இந்த கட்டுரை வெளியான சில மணி நேரங்களில் இந்தியாவில் பெரும் அமளி வெடித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜகவின் கூட்டணி கட்சிகளான பாமக, மதிமுக ஆகியவை இலங்கையுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின.

இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் திங்கள்கிழமை அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மைத்ரேயன் (அதிமுக) எழுப்பிய பிரச்சினைக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிக்கும்போது, ‘இலங்கையை மத்திய அரசு கண்டிக்கும். இலங்கைத்தூதரை அழைத்து விளக்கம் தருமாறு கோருவோம்’ என்று உறுதி அளித்தார்.

மக்களவையிலும் அமளி

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்சினையை அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை திங்கள் கிழமை எழுப்பினார்.

அவர் பேசும்போது, “இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் நமது பிரதமரையும், தமிழக முதல்வரை யும் அவதூறாக சித்தரித்து எழுதியிருப்பது கண்டனத்துக் குரியது. கச்சத்தீவை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை திரும்பப் பெறுவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக அமையும். ராமேசுவரம் மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தற்போது வெளியுறவு அமைச்சராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆண்டு கூறினார். அவர் அமைச்சரான பிறகு மேற்கொண்டுள்ள நடவடிக் கைகள் என்ன? ராமேசுவரம் மீனவர்களும் இந்தியர்களே. இலங்கைக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு சந்தேகத்தை தருகிறது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னாவை திங்கள்கிழமை நேரில் அழைத்து இந்த கட்டுரை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், கொழும்பில் நிருபர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அதிபர் ராஜபக்ச, ‘இப்படி நிகழ்ந்ததற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அறிக்கை தரும்படி கேட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in