Last Updated : 26 May, 2024 03:03 PM

 

Published : 26 May 2024 03:03 PM
Last Updated : 26 May 2024 03:03 PM

“திமுக ஆட்சியில் பறிபோகும் தமிழக நதிநீர் உரிமைகள்” - கோவையில் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்

கோவையில் நேற்று (மே 25) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.படம் ஜெ.மனோகரன்

கோவை: திமுக ஆட்சியில் தமிழக நதிநீர் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கிறது என விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமராவதி, சிறுவாணி, பவானி உள்ளடக்கிய காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழக நதிநீர் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்தி மீட்டெடுத்திட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று (மே 25) நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, அமராவதி, சிறுவாணி பவானி, காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகளும், ஆறுகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நாளிதழில் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது . திமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் அன்றாடம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

அமராவதி அணைக்கு வரும் முக்கிய நீர்வழிப் பாதையான சிலந்தி ஆற்றன் குறுக்கே கேரளா அரசு சட்ட விரோதமாக அணைகளை கட்டுவதற்கு பணிகளை மேற்கொண்டுள்ளது. இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதனை தடுத்து நிறுத்திட ஆணையத்தின் மூலம் சட்ட நெருக்கடிகள் மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே இரண்டு ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதை தடுத்து நிறுத்தாத தமிழக அரசை கண்டிக்கிறோம். எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் முறையிட்டு அணையை இடித்து தள்ளுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு மூன்று இடங்களில் புதிய அணைகளை கட்டி வருவதாக தெரிகிறது. இதை தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x