தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் திரட்டியதாக சென்னையில் அதிரடியாக 6 பேர் கைது

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் திரட்டியதாக சென்னையில் அதிரடியாக 6 பேர் கைது
Updated on
2 min read

சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் திரட்டியதாக சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரை ‘உ.பா.’ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தொடர்ச்சியாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், யூடியூப் சேனல் ஒன்றை போலீஸார் கண்காணித்தபோது, அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பல்வேறு வீடியோக்களில் கிலாஃபத் சித்தாந்தம் தொடர்பாக பேசி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த யூடியூப் சேனலில், அத்தகைய வீடியோக்களை பேசி பதிவேற்றம் செய்து வந்தது சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர் வெளியிடும் வீடியோக்களையும், அவரது நடவடிக்கையையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் ராயப்பேட்டை ஜானி ஜஹான்கான் தெருவில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களை மூளைச்சலவை செய்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள்திரட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுவதாவது:

கவுரவ பேராசிரியர்: ஹமீது உசேன் பொறியியல் படிப்பு படித்துள்ளார். மேலும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் சில காலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், இந்திய தேர்தல் முறைக்கு எதிராகவும், கிலாஃபத் சித்தாந்தம் தொடர்பாகவும் பேசி பிரச்சாரம் செய்துள்ளார்.

அப்போது, அவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களை ராயப்பேட்டையில் ஞாயிற்றுக் கிழமை தோறும் நடைபெறும் கூட்டத்துக்கு வரவழைத்து மூளைச்சலவை செய்து, தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஆட்களை திரட்டி வந்துள்ளார்.மேலும், ஹமீது உசேன் மற்றும்அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், இவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் என்ற ‘உ.பா.’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், தண்டையார்பேட்டை மற்றும் செம்பாக்கம் உள்ளிட்டஇடங்களில் சைபர் க்ரைம் போலீஸார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி, காமராஜபுரத்தை சேர்ந்த முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என்கிற ஜாவித் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் ஒரே நாளில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in