Published : 26 May 2024 06:34 AM
Last Updated : 26 May 2024 06:34 AM

தேர்தல் முடிந்து `குஷி மூடில்' அரசியல் தலைவர்கள்

கொடைக்கானல் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். (அடுத்த படம்) சிங்கப்பூரில் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு. (கடைசி படம்) ஸ்வீடனில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்வாக்குப்பதிவு ஏப். 19-ல் முடிந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கியதிலிருந்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலின் தாக்கத்திலும் பிரச்சாரம் சூடுபிடித்தது.

தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததாலும், தேர்தல் முடிவுகளுக்கு ஒன்றரை மாதம் காத்திருக்க வேண்டியிருப்பதாலும், பிரச்சாரத்தின்போது மேற்கொண்ட கடும் உழைப்பிலிருந்துதங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கொடைக்கானல் சென்ற முதல்வர்: அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப். 29-ம்தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்று,மே 3-ம் தேதி சென்னை திரும்பினார். அவரது மகனான அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் இறுதியில் குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டுச் சென்று, 2 வார பயணத்துக்குப் பின்னர் கடந்த 10-ம் தேதி சென்னை திரும்பினார்.

தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் முடிந்த பின்னர், தெலங்கானா மாநிலத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி கடந்த ஏப். 29 முதல் மே 12 வரை பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் தொகுதியில் களப்பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகளின் வீட்டு விழாக்களுக்கு சென்று சிறப்பித்து வருகிறார். வேலூர் ரத்தினகிரி முருகன்கோயில், தங்க கோயில் உள்ளிட்டஇடங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

வெளிநாட்டில் அமைச்சர்கள்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேர்தலுக்குப் பிறகு டெல்லிக்கு படப்பிடிப்புக்குச் சென்றார். விசிக தலைவர் திருமாவளவன் அண்டை மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டனர்.

வெளிநாடு சென்றுள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தற்போது ஸ்வீடன், டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின்போது, அங்குள்ள பள்ளிகளின் நிலை,கல்வித் தரம் குறித்து அந்நாடுகளின் கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பல்வேறுவிவரங்களை அறிந்து வருகிறார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த வாரம் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளார். அவருடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, வைரமணி, திருச்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று திரும்பினர்.

இது குறித்து திமுகவினர் கூறும்போது, "மதிமுக வேட்பாளர் துரை வைகோ, திமுக வேட்பாளர்அருண் நேரு ஆகியோருக்காக கடும் வெயிலில் அமைச்சர் நேருதீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், ஓய்வு எடுப்பதற்காக, கட்சி நிர்வாகிகளுடன் சுற்றுலா சென்றார்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x