போக்குவரத்து Vs காவல் துறை: கைகுலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்துகொண்ட நடத்துநர் - காவலர்!

போக்குவரத்து Vs காவல் துறை: கைகுலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்துகொண்ட நடத்துநர் - காவலர்!
Updated on
1 min read

சென்னை: தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்த காவலர் ஆறுமுகப்பாண்டியும், அவரிடம் பயணச்சீட்டு எடுக்கூறிய நடத்துநரும் கைக்குலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகளுக்கு பல இடங்களில் தமிழக போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். இதனால், இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், போக்குவரத்து துறை மற்றும் உள்துறை செயலாளர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தொடர்புடைய காவலர் ஆறுமுக பாண்டி மற்றும் அரசுப் பேருந்து நடத்துநர் இருவரும் பேசி கைகுலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், காவலர் ஆறுமுக பாண்டியிடம், நடத்துநர், “நாம் இருவருமே பொதுத் துறையில் வேலை செய்பவர்கள். நீங்கள் காவல் துறையிலும், நான் போக்குவரத்துத் துறையிலும் பணி செய்கிறோம். நீங்கள் அன்று பேருந்தில் வந்தீர்கள். நீங்கள் உங்களது கருத்தை கூறினீர்கள். நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதன்பிறகு நீங்கள் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தீர்கள். ஆனால், இந்தப் பிரச்சினை சமூக ஊடகங்களில் பரவி பிரச்சினையாகி இருக்கிறது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார்.

அதற்கு, காவலர் ஆறுமுக பாண்டி, “நானும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல், நாம் இரண்டு பேரும், இரண்டு துறைகளும் நண்பர்களாக பணியாற்றுவோம்” என்று கூறி இருவரும் ஆரத்தழுவி ஒருவருக்கு ஒருவர் சமாதானம் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in