

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்துக்கு 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு, தேசிய மருத்துவ ஆணையம், 10 லட்சம் பேர் மக்கள்தொகைக்கு, 100 மருத்துவ இடங்கள் என்ற விதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், 15 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டதால், மேலும் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் வாய்ப்பு குறைந்தது.
இந்த புதிய விதி, 2025-ம் ஆண்டுக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இதன்படி, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 26 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக அரசு சார்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காமல், முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பிக்கப் போவதாக திமுக அரசு கூறியிருந்த நிலையில், அதற்கான குறித்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் திமுக அரசு தவறியதால், தற்போது, தமிழகத்தில் சுமார் 900 மருத்துவக் கல்வி இடங்கள் பறிபோயிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும், ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கூட விண்ணப்பிக்காமல், மீதமிருக்கும் 6 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய இருந்த வாய்ப்பையும், 900 மருத்துவர்களை உருவாக்கும் வாய்ப்பையும், பறிகொடுத்திருப்பதுயார் என்பதை,முதல்வர் தெளிவுபடுத்துவாரா?