

சென்னை: தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை நாளாகும். இந்தாண்டு ஜன.15-ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளுவர் பிறந்த நட்சத்திர தினமான நேற்று, ஆளுநர் மாளிகை வளாகத்தி்ல் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக, காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
மேலும், ஆளுநர் மாளிகையின் பாரதியார் மண்டபத்தில் நடந்த திருவள்ளுவர் தின விழாவுக்கான அழைப்பிதழிலும் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளுநருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: நமது கெட்ட நேரம். இதுபோன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கெனவே, திருவள்ளுவருக்கு அவர் காவி உடை அணிவித்தது சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை .
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. தமிழனத்தையும், திருவள்ளுவரையும் அவமானப்படுத்தும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தமிழக அரசை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் தொடர்ந்து, திட்டமிட்ட வகையில் செயல்படும் ஆளுநரின் செயல்களை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திருவள்ளுவருக்கு பாஜக காவி உடையும், திராவிட கட்சிகள் கருப்பு உடையும் அணிவிக்கின்றன. அதிகாரத்தில் இருப்பதால் அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்கின்றனர். திருவள்ளுவருக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதுதவிர, பல்வேறு தமிழறிஞர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் சமூக வலைதள பிரிவு பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி தனது சமூக வலைதளபக்கத்தில், ‘திருவள்ளுவரின் உடைக்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. வள்ளுவர் வெண்ணிற ஆடை அணிந்திருப்பதை யார் கண்டது, எங்கேயாவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா, வள்ளுவர் என்ன உடை அணிந்திருந்தார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளதா,வள்ளுவரை ஞானியாகவும், தெய்வீகமாகவும் பார்ப்பதால், முதல் சித்தராகவும், தமிழ் இலக்கியத்தின் தந்தையாகவும் கருதப்படும் அகஸ்திய முனியை போன்று காவி உடை அணிந்து வணங்கி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.