சிலந்தி ஆறு தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் நாளை முற்றுகை போராட்டம்

சிலந்தி ஆறு தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் நாளை முற்றுகை போராட்டம்
Updated on
1 min read

உடுமலை: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைக் கண்டித்து, உடுமலை அருகே கேரளா செல்லும் சாலையை மறித்துப் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு எவ்வித அனுமதியுமின்றி தடுப்பணை அமைத்து வருகிறது.

கேரளாவின் இந்த செயலை தமிழக கட்சியினர், விவசாயிகள் கண்டித்துள்ள போதும், கட்டுமானப் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இதைக் கண்டித்து அமராவதி அணை பாசனத்துக்கு உட்பட்ட விவசாயிகளைத் திரட்டி, கேரளா செல்லும் ஒன்பதாறு சோதனைச் சாவடி சாலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம்.

வரும் 26-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தால், தடையை மீறி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in