

சென்னை: பாதுகாப்பான சாலை போக்குவரத்துக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடி-யும் பிகேஎப் ஸ்ரீதர் அண்ட் சந்தானம் எல்எல்பி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
மத்திய அரசின் தொலை தொடர்புத் துறையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்யும் புதிய திட்டத்தை சென்னை ஐஐடி மேற்கொள்கிறது. இத்திட்டத்தில் ஐஐடி-யுடன் இணைந்து செயல்படும் வகையில் பிகேஎப் ஸ்ரீதர் அண்ட் சந்தானம் எல்எல்பி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.சந்தானகிருஷ்ணன் கூறும்போது, “போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையில் எங்களுக்கு நீண்ட அனுபவம் இருப்பதாலும், பலதரபட்ட தொழில்களுடன் பரிச்சயம் இருப்பதாலும் பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதிசெய்வது தொடர்பாக ஐஐடி செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கு எங்களால் பல்வேறு வழிகளில் உதவி செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.
ஐஐடி டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி ) மனு சந்தானம் கூறும்போது, ‘‘ஆராய்ச்சி பணிகளில் தொழில்நுட்பங்களை புகுத்துவதில் ஐஐடி உறுதிபூண்டுள்ளது. போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் பல்வேறு மையங்கள் எங்களிடம் ஏராளமாக உள்ளன.
அந்த வகையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய திட்டத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனமான பிகேஎப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது போக்குவரத்து ஆராய்ச்சிகளை வேகப்படுத்த பேருதவியாக இருக்கும்.
இந்த கூட்டுமுயற்சி, காற்று மாசுபாட்டையும், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பாதியாக குறைக்கும். அத்துடன் எரிபொருளும் பெருமளவு சேமிக்கப்படும்’’ என்றார்.