Published : 25 May 2024 05:30 AM
Last Updated : 25 May 2024 05:30 AM

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - பாஜக நிர்வாகியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு

சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸாரின் சம்மனுக்கு தடை கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும்பாஜக அமைப்புச் செயலாளர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது, நெல்லைபாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் 3 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கெனவே பாஜகவை சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தியுள்ள சிபிசிஐடி போலீஸார், அக்கட்சியின் அமைப்புச் செயலர் கேசவ விநாயகனுக்கும் மே 21-ல் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த சம்மனை எதிர்த்தும், பணம்பறிமுதல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும் கேசவ விநாயகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி எந்த காரணமும் இல்லாமல் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், தமிழக பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸார் இந்த வழக்கை சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு விடுமுறை கால அமர்வில் நீதிபதி சி.சரவணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகி, ‘‘பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது, வேண்டுமென்றே அவருக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என வாதிட்டனர்.

சிபிசிஐடி தரப்பில் ஆஜரானஅரசு குற்றவியல் வழக்கறிஞர்வினோத்குமார், ‘‘மனுதாரரானகேசவ விநாயகனுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படிதான் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்தச் சூழலில் பணம் பறிமுதல் தொடர்பான வழக்கையே ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதான் புரியாத புதிராக உள்ளது’’ என வாதிட்டார்.

அப்போது கேசவ விநாயகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘மனுதாரர் தமிழக தேர்தல் பொறுப்பாளர் மட்டுமின்றி, மற்ற மாநிலதேர்தல்களுக்கும் மேற்பார்வையாளராக உள்ளார். வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராவதாக போலீஸாரிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிவாரணமாக இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’’ என கோரினர்.

ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சி.சரவணன், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x