Published : 27 Apr 2018 08:06 AM
Last Updated : 27 Apr 2018 08:06 AM

மருத்துவ பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 3 ஆண்டுகளாக தமிழகத்துக்கு முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுநர்கள், 90 நுண்கதிர்வீச்சாளர்கள், 21 வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் கருணை அடிப்படையில் 10 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

பணி நியமன ஆணை பெற்றுள்ள மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்கள் கடமைகளை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். திருக்குறளில் உள்ள ‘மருந்து’ என்ற அதிகாரத்தில் உள்ள 10 குறள்களை படித்து அதன்படி நடக்க வேண்டும்.

ஆங்கில மருத்துவத்தில் சிறந்த வல்லுநர்களாக இருந்தாலும், அந்த மருத்துவங்களில் தமிழ் மருத்துவத்தின் அடிநாதம் இருப்பதை உணர வேண்டும். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. இரு கைகளையும் இழந்த திண்டுக்கல் ஆத்தூரைச் சேர்ந்த நாராயணசாமிக்கு, இறந்த ஒருவரின் கைகளை பொருத்தி, அவர் பயன்படுத்தும் நிலையில் உள்ளார். நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் இரு கைகளையும் பொருத்தி வெற்றி கண்ட மாநிலம் தமிழகம். இதற்காக அந்த மருத்துவக் குழுவுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை ஏழை, எளிய மக்களுக்கும் ஏற்றத்தாழ்வின்றி அளிக்க, சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான், நாட்டிலேயே உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழகம் உள்ளது. சுகாதாரத் துறைக்கு கடந்த 2010-11ல் ஒதுக்கப்பட்ட ரூ 3 ஆயிரத்து 888 கோடி நிதி தற்போது 11 ஆயிரத்து 638 கோடியே 44 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்களே தற்போது இல்லை’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமிக்கு கைகளை பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக்குழுவினரை முதல்வர் பாராட்டினார். திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x