

திருவல்லிக்கேணியில் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது கார் மோதியதில் அவரது 2 பற்கள் உடைந்தன. போதையில் கார் ஓட்டிய கால் டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றுபவர் சீனிவாசன் (54). பல்லவன் சாலையில் புதன்கிழமை அதிகாலை1.30 மணிக்கு சீனி வாசன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாரி முனையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வேகமாக ஒரு கால்டாக்ஸி வந்தது. இதைப் பார்த்த சீனிவாசன், காரை நிறுத்த முயன்றார்.
ஆனால் அந்தக் கார் சீனிவாசன் மீது உரசிவிட்டு வேகமாக சென்று சாலை தடுப்புக்காக போடப்பட்டிருந்த கம்பி மீது மோதியது. பின்னர் எதிரே வந்த பைக் மீது மோதி நின்றது. கார் உரசியதில் கீழே விழுந்த எஸ்.ஐ. சீனிவாசனுக்கு 2 பற்கள் உடைந்தன. கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பைக்கில் வந்த கார்த்திகேயன் என்பவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கால் டாக்ஸி டிரைவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் பல்லாவரம் சங்கர் நகரைச் சேர்ந்த குமார் (38) என்பதும், போதையில் இருந்ததால் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டியதும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.