Published : 29 Apr 2018 08:42 AM
Last Updated : 29 Apr 2018 08:42 AM

மதுரை சித்திரை திருவிழா வீதிகளில் பவனி வந்த தேர்கள்: பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கிடையே மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர், பிரியாவிடையும் தனித் தனி தேர்களில் பவனி வந்தனர்.

மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியபடி மாசி வீதிகளில் உலா வந்தனர். அம்மனுக்கு கடந்த ஏப். 25-ம் தேதி பட்டாபிஷேகம், மறுநாள் திக் விஜயம், 27-ம் தேதி திருக்கல்யாணம் என அடுத்தடுத்து விமரிசையாக உற்சவங்கள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவில் திருக்கல்யாண கோலத்தில் பூப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த மீனாட்சி அம்மனையும், யானை வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரரையும் மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு பல மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர்.

சிறப்பு அலங்காரம்

நேற்று அதிகாலை 5 மணியளவில் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட மீனாட்சி, சுந்தரேசுவரர் ஊர்வலமாக கீழமாசி வீதிக்கு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மற்றொரு தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

காலை 6.35 மணிக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், ஆட்சியர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பெரிய தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க மாசி வீதிகளில் ஆடி, அசைந்தபடி தேர் வலம் வந்தது. பின்னர் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேர் காலை 7.10 மணிக்கு புறப்பட்டது.

பெரிய தேர் முதலிலும், சிறிய தேர் அதன் பின்புறமும் சென்றது. மாசி வீதிகளின் இருமருங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கிராமப்புறங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். தேரோட்டத்தைக் காண வெளிநாட்டினரும் திரண்டிருந்தனர்.

தேர் வடத்தை பிடித்து இழுப்பவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் மீது ஆங்காங்கே பக்தர்களே தண்ணீர் தெளித்து குளிர்வித்து உற்சாகப்படுத்தினர். ஆங்காங்கே குளிர் பானங்கள், மோர் வழங்கினர்.

தேருக்கு முன்னதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல்துறை வேன் சென்றது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார், சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், குற்றப் பிரிவினர் என தீவிர கண்காணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். அவசர மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதாரம், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய தேர் பிற்பகல் ஒரு மணிக்கும், சிறிய தேர் 1.10 மணிக்கும் நிலையை அடைந்தது.

நேற்றிரவில் சப்தாவர்ண சப்பரத்தில் அம்மன்- சுவாமியும் இணைந்து ஒரே வாகனத்தில் எழுந்தருளினர். இன்று காலையில் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்திலும், இரவில் வெள்ளி ரிஷப வாகனங்களில் அம்மன், சுவாமியும் மாசி வீதிகளிலும் எழுந்தருள்கின்றனர். பின்னர் தேவேந்திர பூஜையுடன் மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நிறைவடைகிறது. முன்னதாக, இரவு 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் விடைபெற்று திருப்பரங்குன்றம் திரும்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x