கன்னியாகுமரியில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

பேச்சிப்பாறையில் அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவி பகுதியையொட்டிய  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பேச்சிப்பாறையில் அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவி பகுதியையொட்டிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால், பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 1986 கனஅடி ஆக உள்ளது. 1539 கனஅடி தண்ணீர் வெளியேறி வருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கோடையை குளிர்விக்கும் வகையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று பேச்சிப்பாறையில் 75 மிமீ., மழை பெய்தது. கனமழையால் பேச்சிப்பாறை நீர்மட்டம் 45.64 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1986 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணை வெள்ள அபாய கட்டத்தில் உள்ள நிலையில் அணையில் இருந்து உபரியாக 532 கனஅடியும், மதகு வழியாக 1007 கனஅடியும் என்று மொத்தம் 1539 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் புத்தன்அணை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி , மற்றும் பிற ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 1409 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்துள்ளது.

சிற்றாறு ஒன்றில் 13.42 அடியும், சிற்றாறு இரண்டில் 13.51 அடியும் தண்ணீர் உள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அளவாக சென்ற நிலையில் மழையால் 5.8 அடியாக உயர்ந்துள்ளது. அடையாமடையில் 57 மிமீ., சிற்றாறு ஒன்றில் 54, பெருஞ்சாணியில் 53, புத்தன் அணை, பாலமோரில் தலா 52, மாம்பழத்துறையாறில் 51, சிவலோகம், ஆனைகிடங்கில் தலா 49, சுருளோட்டில் 47, திற்பரப்பில் 42 மிமீ., மழை பதிவாகனது.

கனமழையால் நாகர்கோவில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நாகர்கோவில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குமரியில் பெய்த கனமழையால் 14 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. தேங்காய் வெட்டும் தொழில், ரப்பர் பால் வெட்டுதல், மீன்பிடி தொழில், செங்கல் உற்பத்தி உட்பட பலதரப்பட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மழையால் குறைந்துள்ளது. கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. குமரி மாவட்டம் மழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in