Published : 24 May 2024 05:40 AM
Last Updated : 24 May 2024 05:40 AM

எல்லா நிலையிலும் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்: அமெரிக்க தூதரக அதிகாரி சமந்தா ஜாக்சன் வலியுறுத்தல்

சென்னை: பாலின சமத்துவம் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் எல்லா நிலையிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க துணை தூதரக அதிகாரியும், செய்தி தொடர்பாளருமான சமந்தா ஜாக்சன் வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், தென்னிந்திய எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் அலும்னி அசோசியேஷன், சுரானா அண்ட் சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், ‘அனைவரையும் உள்ளடக்கிய பத்திரிகை பணி சூழலை உருவாக்குவதில் செய்தி ஆசிரியரின் பங்கு’ என்ற தலைப்பில், சென்னையில் நேற்று குழு விவாதம் நடைபெற்றது.

சுரானா நிறுவன தலைமை செயல் அதிகாரி வினோத் சுரானா வரவேற்றார். எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் அசோசியேஷன் செயலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அமெரிக்க துணை தூதரக அதிகாரியும், செய்தி தொடர்பாளருமான சமந்தா ஜாக்சன் தனது தொடக்க உரையில் பேசியதாவது: அமெரிக்காவில் சமத்துவம், கருத்துரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அமெரிக்க - இந்திய உறவை மேலும் வலுப்படுத்த பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறோம்.

பாலின சமத்துவம் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் எல்லா நிலையிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்காக நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

உலக பத்திரிகை தினத்தையொட்டி 8 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தோம். இதுதான் கடைசி நிகழ்வு ஆகும். ஊடகத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையை எட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த குழு விவாதம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற குழு விவாதத்தில், ஏசியன் இதழியல் கல்லூரி தலைவர் சசிகுமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா உறைவிட ஆசிரியர் அருண் ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உதவி உறைவிட ஆசிரியர் ரஞ்சிதா குணசேகரன், பத்திரிகையாளர் டி.கே.சுமிதா ஆகியோர் பங்கேற்றனர்.

சசிகுமார் பேசும்போது, “மக்கள்தொகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் கணிசமாக இருந்தாலும், ஊடகத்தில் குறைவாகவே பணியாற்றுகின்றனர். எனவே, ஊடக துறையில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து பணிபுரிய, தேவையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x