Published : 24 May 2024 05:50 AM
Last Updated : 24 May 2024 05:50 AM

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: எம்டிஆர்எஃப் அறக்கட்டளை - எம்பெட்யூஆர் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்.டி.ஆர்.எஃப் அறக்கட்டளை - எம்பெட்யூஆர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீரிழிவு நோய் பாதிப்பால் உடலில் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிய மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஆராய்ச்சியை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் அதிகரித்துவரும் நீரிழிவு நோயின் பரவலை தடுக்கும் விதமாக சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், எம்பெட்யூஆர் நிறுவனமும் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நீரிழிவு நோய் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.மோகன் மற்றும் எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸின் நிறுவனர் ராஜேஷ் சி சுப்பிரமணியம் கலந்துகொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது, சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீரிழிவு நோய் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனை கட்டுப்படுத்துவதற்கும், மேலும் கண், காது, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம்.

அந்தவகையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆயிரம் பேரின் சிஜிஎம் (குளுக்கோஸ் கண்காணிப்பு) தரவுகளை சேகரித்து, இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள குளுக்கோஸ் கண்காணிப்பு (சிஜிஎம்) செய்யப்படுகிறது. அதாவது, சிஜிஎம் என்ற கருவியை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் பொருத்தப்படுகிறது. அந்த கருவி 24 மணி நேரமும் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணித்து, அந்த தரவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கும்.

இது போல, நீரிழிவு நோயாளிகளின் சிஜிஎம் தரவுகளை சேகரித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், அவர்களுக்கு உடல் உறுப்பு பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட போகிறதா என்பதை முன்கூட்டியே கண்டறியலாம். மேலும், அவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

மேலும், நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாதவர்களின் தரவுகளும் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு வராமல், முன்கூட்டியே தடுக்கலாம். எதிர்கால தலைமுறையினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x