Published : 24 May 2024 05:35 AM
Last Updated : 24 May 2024 05:35 AM

நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டினர்: ஓய்வுபெறும் நாளில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா நெகிழ்ச்சி

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலாவுக்கு நேற்று மாலை பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று ஏற்புரை நிகழ்த்தும் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா. அருகில் மூத்த நீதிபதிகள் . | படம்: ம.பிரபு |

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டியுள்ளனர் என ஓய்வுபெறும் நாளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாழ்த்தி பேசும்போது, ‘‘பல ராஜ்ஜியங்களை வெற்றி கொண்ட ராஜராஜசோழன் போல தலைமை நீதிபதியாக பதவி வகித்த கங்காபுர்வாலா அனைவருடைய இதயங்களையும் வெற்றி கொண்டுள்ளார்.

பொதுநல வழக்குகளுக்காக தனியாக பட்டியல் தயாரித்து நேர விரயத்தை தவிர்த்தார். 14 ஆண்டுகள் 2 மாதம் நீதிபதியாக பணிபுரிந்துள்ள தலைமை நீதிபதி, தனது பணிக்காலத்தில் 7 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். அவர் மொத்தம் 99 ஆயிரத்து 949 வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளார். இது அசாத்தியமான ஒன்று’’ என பாராட்டினார்.

பாராட்டுக்கு நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா பேசியதாவது: நான் 20 ஆண்டுகள் பல்வேறு சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றி பல வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளேன். அதில் பலர் தற்போது நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

சென்னைக்கு வரும்போது நிலைமை எப்படி இருக்குமோ என யோசித்தேன். ஆனால், இங்குள்ள நீதிபதிகளின் அன்பான உபசரிப்பு மற்றும் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டியுள்ளனர். அதனால் நான் இப்பவும் சொந்த ஊரில் இருப்பது போலவே உணருகிறேன். நேற்றுதான் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதுபோல் இருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்கு நீங்கள் அனைவரும்தான் காரணம்.

பொதுவாக அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களை குறை சொல்லும் போக்கும், அறிவுரை கூறும் போக்கும்தான் அதிகமாக உள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் சந்தித்த இளம் வழக்கறிஞர்கள் அனைவரும் திறமைசாலிகள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x