Published : 23 May 2024 07:03 PM
Last Updated : 23 May 2024 07:03 PM

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழைநீர் புகாதவாறு குழாய்கள் அமைப்பு: பொதுப் பணித்துறை தகவல்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக மழைநீர் குழாய் அமைப்புகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் மழைநீர் புகாதவாறு மழைநீர் குழாய்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது” என்று நூலகத்தில் இன்று ஆய்வு செய்த பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பில் குழந்தைகளுக்கான சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்கள் இங்கு, நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த பயிற்சி முகாமில் பாட்டுப் பாடுதல், ஒயிலாட்டம், பரதம், ஓவியம், இசை, வேடமிட்டு கதை சொல்லுதல், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகள், தோல்பாவை கூத்து, கைப்பேசி புகைப்படப் பயிற்சி என்று பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி முகாமில் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், மரம் வளர்ப்பு, காடுகளை பாதுகாப்பதினால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பாக குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பில் பள்ளி மாணவ - மாணவியருக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த ‘நூல் அரும்புகள்’ என்ற தலைப்பில் வாரம் இரண்டு நாட்கள் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வார இறுதி நாளில் சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் நூலகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. தற்போது தினந்தோறும் 4 ஆயிரம் பேர் வரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். நூலகம் திறக்கப்பட்டு இதுவரையில் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் நூலகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) பிற்பகல் திடீரென மிக கனமழை பெய்தது. மிக குறைந்த கால இடைவெளியில் சுமார் 108 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. இந்நிலையில், நூலகத்தின் தரைத்தளத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் தொட்டியில் பார்வையாளர்கள் கவனக்குறைவால் பாலிதீன் பைகள், திண்பண்டப் (பிஸ்கட்) பாக்கெட், தாள்கள் மற்றும் தெர்மகோல் போன்றவற்றை போட்டதால் மழைநீர் வெளியேற அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் மழைநீர் நூலகத்தின் தரைத்தளத்தில் புகுந்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் ஏற்பட்ட இடர்பாடு மிக துரிதமாக நீக்கப்பட்டு மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அனைத்துப் பிரிவுகளும் எவ்வித தடையுமின்றி இயல்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. மேலும், இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நேராமல் தடுக்கும் வண்ணம் தற்போது மழைநீர் குழாய்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நூலகமானது நவீன கட்டுமான அம்சங்களுடன் குழந்தைகள், வாசகர்கள், பொதுமக்கள், போட்டித் தேர்வாளர்கள், மாணவர்கள் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சியாளர்கள். மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் கவரக்கூடிய வகையில் நவீன பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. திறந்து ஓராண்டு நிறைவடைதற்குள் சுமார் 7 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கும் மேலாக வந்து இந்த நூலகத்தைப் பார்வையிட்டு பயன் பெற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்புக்கும், தனித்தன்மைக்கும் சான்றாகும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x