வேங்கைவயல் விவகாரம்: காவலரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி விசாரணை

வேங்கைவயல் விவகாரம்: காவலரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி விசாரணை
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவலரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் நேரடி சாட்சிகள் யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான சோதனையின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரையில், 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவும், தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியின் முடிவும் ஒத்துப்போகவில்லை. இதனால், இவர்களில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீமன்றத்தில் மனு அளித்தனர். இதற்கு 10 பேருமே எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சோதனை நடத்துவதற்கான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் இரு கட்டங்களாக காவலர் ஒருவர் உட்பட 5 பேரிடம் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அந்தக் காவலர் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கறிஞர்களுடன் இன்று காலை சுமார் 11 மணிக்கு ஆஜரானார். அவரிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்பனா நீண்ட நேரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்துக்கு காவலருடன் நிறைய பேர் செல்ல முயன்றதால், வழியில் 4 இடங்களில் தடுப்புகளை வைத்து தடுத்த போலீஸார் காவலர் மற்றும் அவருடைய வழக்கறிஞர்களை மட்டும் விசாரணைக்குச் செல்ல அனுமதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in