இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் கொலை வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது

கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் கோபால்
கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் கோபால்
Updated on
1 min read

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் ராஜாஜி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி(45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் மாநில தலைவரான இவர் நேற்று (புதன்கிழமை) மாலை பூந்தமல்லி அருகே குமணன்சாவடி, மாங்காடு சாலையில் உள்ள தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், தேநீர் கடைக்குள் நுழைந்து, அரிவாளால் ராஜாஜியை வெட்டிவிட்டு, தப்பியோடினார். இதில், படுகாயமடைந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீஸார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் குறித்து மேற்கொண்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகுமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான, பூந்தமல்லியை சேர்ந்த கோபால், சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: காங்கிரஸ் பிரமுகர் கோபாலின் மனைவி கவுரி, கடந்த சில ஆண்டுகளாக கோபாலை விட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராஜாஜி, கவுரியை தன் மனைவி என குறிப்பிட்டு, சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கவுரி உயிரிழந்த நிலையில், தன் மனைவி கவுரி பெயரில் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து உள்ளதாக ராஜாஜி, பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியதோடு, சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், கோபாலின் சொத்துக்களில் பெரும்பகுதி கவுரியின் பெயரில் இருக்கிறது. இந்த காரணங்களால், ராஜாஜிக்கும், கோபாலுக்கும் இடையே இருந்து முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ராஜாஜியின் தம்பி கண்ணனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில்தான், கோபால் தூண்டுதலின் பேரில், கிருஷ்ணகுமார், ராஜாஜியை கொலை செய்துள்ளார். இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in