Published : 23 May 2024 11:35 AM
Last Updated : 23 May 2024 11:35 AM

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது: அன்புமணி

முல்லைப்பெரியாறு அணை

சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேரளத்தின் சதித் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் விண்ணப்பித்திருக்கிறது.

புதிய அணை கட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போது உள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் அது வலுவிழந்து விட்டதாகவும், அந்த அணை இடிந்தால் அதற்கு கீழ் உள்ள இடுக்கி உள்ளிட்ட 3 அணைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அதனால் மத்திய கேரளத்தில் பேரழிவு ஏற்படும் என்றும் கேரள அரசு கூறி வருகிறது.

இந்தப் பேரழிவைத் தடுக்க புதிய அணையை கட்டுவது மட்டுமே தீர்வு என்று கூறியுள்ள கேரள அரசு, இப்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டருக்கு கீழ் புதிய அணை கட்ட தீர்மானித்து அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத் தான் புதிய அணை கட்டுவதாலும், பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை கோரியுள்ளது.

கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த இதற்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் அமைச்சகம், அடுத்தக்கட்டமாக வல்லுனர் குழுவின் ஆய்வுக்காக விண்ணப்பத்தை கடந்த 14ஆம் தேதி அனுப்பி வைத்தது. அதன் மீது வல்லுனர் குழு வரும் 28ஆம் தேதி ஆய்வு செய்து தீர்மானிக்க உள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு எதிரான சதித் திட்டமும் ஆகும். இதற்கான கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யாமல் வல்லுனர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியதே தவறு. இது 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

முல்லைப் பெரியாற்று அணையின் வலிமை குறித்த வழக்கில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டது.

அதன்படி, அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வரும் கேரள அரசு, இன்னொரு புறம், அணை வலுவிழந்து விட்டதாக நாடகமாடி புதிய அணை கட்ட முயல்வது வாடிக்கையாகிவிட்டது.

முல்லைப்பெரியாற்று அணையின் வலிமை, புதிய அணைக்கான தேவை ஆகியவை குறித்து கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு தனிநபர்களின் பெயர்களில் கேரள அரசின் தூண்டுதலால் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அதுமட்டுமின்றி, அதன்பின் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவும் அணையை பல முறை ஆய்வு செய்து அது மிகவும் உறுதியாக இருப்பதாக சான்று அளித்தது. ஆனாலும் கூட, புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு துடிப்பது தவறு; உள்நோக்கம் கொண்டதாகும்.

கேரள அரசின் நோக்கம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது அல்ல. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் தடுப்பது தான். முல்லைப்பெரியாறு அணையின் நீர் தேக்கப்பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கவே இது போன்ற முயற்சிகளை கேரளம் மேற்கொள்கிறது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களையும் உள்வாங்கி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்வது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

மாறாக, முல்லைப் பெரியாற்று அணையின் அங்கமான பேபி அணையை வலுப்படுத்தத் தடையாக அப்பகுதியில் உள்ள சுமார் 15 மரங்களை வெட்ட உடனடியாக அனுமதி அளிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x