Published : 23 May 2024 04:47 AM
Last Updated : 23 May 2024 04:47 AM

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட தமிழகம் மற்றும் தெற்குஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி (நாளை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு, மேலும்வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ம் தேதி மாலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் ஆழியாரில் 15 செ.மீ., திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 14 செ.மீ., அமராவதி அணையில் 12 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 9 செ.மீ.,கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, வாரப்பட்டியில் 8 செ.மீ.,கன்னியாகுமரி, குளச்சல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.

மே 25, 26-ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 25-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கோடை மழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்துக்கு 12.5 செமீ மழை இயல்பாக கிடைக்கும். இந்நிலையில், மார்ச் 1 முதல் மே 21 வரையில் 11.47 செமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ராணிப்பேட்டையில் இடி, மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மே 16 முதல் 21-ம் தேதி வரை கனமழை காரணமாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மழைக்கு 19 கால்நடைகள் இறந்துள்ளதுடன், 55 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், மே 24-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் நோக்கில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி பேரின் செல்போனுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x