Published : 23 May 2024 06:00 AM
Last Updated : 23 May 2024 06:00 AM

தங்க பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

மாரியப்பன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் பாரா அத்லெட்டிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாரா அத்லெட்டிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டுக்கும், தமிழகத்துக்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன். அவர் வெற்றிக்குத் துணைபுரிந்த குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் பாராட்டுகள்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை வேண்டுகிறேன்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி: தங்க பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். அவர் மென்மேலும் உயரம் தொட வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய, மாநில அரசுகள் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் தொடர் விளையாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உதவிகரமாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதேபோல், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், சசிகலா உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x