Published : 23 May 2024 06:12 AM
Last Updated : 23 May 2024 06:12 AM
சென்னை: மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியின் 2011-21 காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 1,449 பேருந்துகள் (மொத்தம் 14,489 பேருந்துகள்) அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் (2006-11) ஆண்டுக்கு 3,001 புதிய பேருந்துகள் (மொத்தம் 15,005 பேருந்துகள்) அறிமுகப்படுத்தப்பட்டன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காததால், ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. கேஎஃப்டபிள்யூ ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் மூலம் 2,213 டீசல் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு தகுந்த அறிவுரைகள் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் பேருந்து கொள்முதல் என்பது கூண்டு கட்டுவதிலும், ஒப்பந்த நிலையிலும் உள்ளது.
போக்குவரத்துக் கழகங்களுக்கு 10 ஆண்டு காலத்தில் ரூ.23,494.74 கோடியை அதிமுக அரசு வழங்கிய நிலையில், தற்போதைய திமுக அரசு 4 ஆண்டுகளில் ரூ.29,502.70 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்,புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் கூண்டு கட்டுவதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால், 7,682 புதிய பேருந்துகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் 1,000 மின்சார பேருந்துகள் என மொத்தம் 8,682 புதிய பேருந்துகள் மற்றும் 1,500 பேருந்துகள் கூண்டு கட்டி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 791 புதிய பேருந்துகளும், 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 2024-25-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரும் வகையில், ஒவ்வொரு மாதமும் 300-க்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் 473.61 கோடி முறையும், 28.62 லட்சம் முறை திருநங்கைகளும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் 3.78 கோடி முறையும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முந்தையை அரசு காலத்தில் பேருந்து விபத்துகளால் ஆண்டுக்கு 1,201 என்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை, தற்போது 911 ஆக குறைந்துள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT