வீட்டில் இருந்து பணியாற்ற பெண் ஊழியரை அனுமதிக்கலாம்: தொழிலாளர் நலத் துறை செயலர் யோசனை

குமார் ஜெயந்த் | கோப்புப் படம்
குமார் ஜெயந்த் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் காலகட்டத்தில் பெண் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கலாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு தமிழக தொழிலாளர் நலத் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (ஃபிக்கி) தமிழ்நாடு மாநில கவுன்சில் சார்பில் மனிதவளம் தொடர்பான மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை செயலர் குமார் ஜெயந்த் பேசியதாவது:

உலக அளவில் பணியாளர்கள் நிலையில் மட்டுமின்றி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளிலும் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையை நாம் தக்கவைக்க வேண்டும்.

மாறிவரும் சூழலில், பணிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சராசரியாக, பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள்.

பணிக்கு செல்லும் பெண்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. திருமணம், குடும்பத்தை பார்த்துக் கொள்வது, குழந்தைகளை பராமரிப்பது போன்ற காரணங்களால் அவர்கள் அலுவலக பணியை கைவிடும் நிலை ஏற்படுகிறது.

குடும்ப கடமைகளை முடித்து 5-10 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, மீண்டும் பணியில் சேரும்போது, அலுவலக சூழல், வேலைமுறை, பயிற்சி என அனைத்தும் முற்றிலுமாக மாறியிருக்கும். இதனால், அடிப்படை நிலையில் இருந்து அவர்கள் மீண்டும் பணியை தொடர நேரிடுகிறது. இதனால் மனிதவளம் பாதிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் காலகட்டத்தில் பெண் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற (Work from Home) அனுமதிக்கலாம். இது பெண்களுக்கு பேருதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, நன்கு பயிற்சி, அனுபவம் பெற்ற பெண்கள் பணியில் இருந்து விலகுவதையும் தடுக்கும். இதனால், நிறுவனங்களின் மனிதவளமும் பாதுகாக்கப்படும்.

இதற்கேற்ப, ஃபிக்கி போன்ற தொழில் கூட்டமைப்புகளும், மனிதவள மேம்பாட்டு நிபுணர்களும் மனிதவள கொள்கைகளை வகுக்க வேண்டும். இதை ஐ.டி. நிறுவனங்களில் எளிதாக நடைமுறைப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய துணை தூதர் ஓலேக் அவ்தீவ் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டார். நிறுவனங்களின் வளர்ச்சியில் மனிதவள மேம்பாட்டு துறையின் பங்களிப்பை விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி.செல்வம் எடுத்துரைத்தார்.

முன்னதாக, மாநாட்டு அமைப்பாளர் என்.ஆர்.மணி வரவேற்றார். நிறைவாக, ஃபிக்கி மாநில கவுன்சில் இணை தலைவர் புபேஷ் நாகராஜன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in