Published : 03 Apr 2018 12:00 PM
Last Updated : 03 Apr 2018 12:00 PM

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத திருப்பூர் அதிமுக எம்எல்ஏ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் இவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை. இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிமுக சார்பில், மார்ச் 3-ம் தேதி (இன்று) வருவாய் மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (செவ்வாய்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகே, திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உட்கட்சி பூசல் காரணமாக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பங்கேற்கவில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை என குணசேகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x