Published : 23 May 2024 05:35 AM
Last Updated : 23 May 2024 05:35 AM

சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் சில பகுதிகளில் ஜூன் 2 வரை 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

சென்னை

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2-ம் தேதி வரை 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் நடைபெறும்.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள், நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், நாளை (மே 24) முதல் ஜூன் 2-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.

அதன்படி சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்தில் மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகர், மடுவின்கரை, பேபி நகர், தந்தை பெரியார் நகர், கருணாநிதி நகர், கலாஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், ஏஜிஎஸ் காலனி ஆகிய இடங்களில் இரு நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும்.

மேலும் பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், காவேரி நகர், திருமலை நகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம் புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியான்பேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம்-துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும்.பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x