

மதுரையில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அழகர்சாமி (38). மாநகர் மாவட்ட அதிமுக தெற்கு 3-ம் பகுதி அதிமுக இளைஞரணி இணைச்செயலராக இருந்தவர். வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு தெற்கு வாசல், கீழவெளி வீதியிலுள்ள டீக்கடை முன் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அழகர்சாமியை அரிவாளால் வெட்டியது. அவர்களிடமிருந்து தப்புவதற்காக அழகர்சாமி ஓடினார்.
ஆனாலும் விடாமல் விரட்டிச் சென்ற அந்த கும்பல் அழகர்சாமியை சரமாரியாக வெட்டியது. 9 இடங்களில் வெட்டுக் காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த மாநகர காவல் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து அழகர்சாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, அழகர்சாமியின் சொந்த ஊர் கமுதி அருகேயுள்ள பம்மனேந்தல். இந்த ஊரில் கரிமூட்டம் போடுவது தொடர்பாக மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த விஜயலிங்கம் என்பவருக்கும், அழகர்சாமியின் குடும்பத்தின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 2011-ம் ஆண்டு விஜயலிங்கத்தை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதுதொடர்பாக அழகர்சாமியும், அவரது உறவினர்கள் சிலரும் அப்போது கைது செய்யப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயலிங்கம் தரப்பினர் அழகர்சாமியை கொலை செய்திருக்கலாம் என்றனர்.
தெற்குவாசல் போலீஸார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விஜயலிங்கம், ராமசாமி, பாலகிருஷ்ணன், அலெக்ஸ், வழக்கறிஞர் நீதிராஜன், சோலை ராஜா உள்பட 8 பேரை தேடிவந்தனர். அவர்களில் ராமசாமி, பாலகிருஷ்ணன் ஆகி யோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
4 நாட்களில் 5 கொலைகள்!
மதுரை மாநகரம், மாவட்ட பகுதிகளில் கடந்த 4 நாளில் மட்டும் 5 கொலைகள் நடைபெற்றுள்ளன. உசிலம்பட்டி மாதரையைச் சேர்ந்த கோழிக்கடைக்காரர் பாண்டி என்பவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் ஆக. 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த காதர்மொய்தீன் என்பவர் குடும்ப பிரச்சினையில் தனது சகோதரனாலேயே ஆக. 6-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
புதிதாக கடை தொடங்கியது தொடர்பான பிரச்சினையில் மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த சி.டி கடைக்காரர் விஜயகுமார் என்பவர் தன்னிடம் பணிபுரிந்த நபரால் ஆக.7-ம் தேதி கொலை செய்யப்பட்டார். உறவினர் கொலைக்கு பழிக்குப்பழியாக வழக்கறிஞர் முத்து துரை என்பவர் ஆக. 8-ம் தேதி காலை திருப்பாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அன்றிரவே முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் அழகர்சாமியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். குடும்ப பிரச்சினை, தொழில்போட்டி, முன்விரோதம் என பல காரணங்களைச் சொல்லி ஒருவரின் உயிரைப் பறிக்கும் இந்த செயல்களுக்கு மனிதர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்ததே காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.