Published : 22 May 2024 09:44 PM
Last Updated : 22 May 2024 09:44 PM
சென்னை: நாடு முழுவதும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் 22 மருந்துகள் தரமற்றவையாகவும், போலியாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வின் போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அதில், காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததும், உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் 5 மருந்துகள் போலியானவையாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT