

விழுப்புரம்: விழுப்புரம் காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் இளைஞரி்ன் உடலை தோண்டியெடுத்து மறுபிரேத பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆட்சியர் பழனி முன்னிலையில் விழுப்புரம் முக்தி அருகே உள்ள இடுகாட்டில் ராஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுகூராய்வு இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
விழுப்புரம் பெரிய காலனியில் வசித்து வந்தவர் கே.ராஜா (43). விழுப்புரம் திருப்பாச்சாவடிமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக்கூறி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காலை 9 மணிக்கு ராஜாவை விழுப்புரம் தாலுகா போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் லத்தி மற்றும் பூட்ஸ் கால்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் போலீஸாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் வலியால் துடித்துள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதால் உடலை தோண்டியெடுத்து வேறு மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி இறந்த ராஜாவின் மனைவி அஞ்சு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், தனது கணவரின் உடலை அவசர கதியில் பிரேத பரிசோதனை செய்து தன்னிடம் ஒப்படைத்த போலீஸார் தகனம் செய்ய வற்புறுத்தியதாகவும், தங்களது குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்த நிலையில், மீண்டும் அந்த உடலை தோண்டியெடுத்து தகனம் செய்யும்படி போலீஸார் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பத்திரப்படுத்தவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த நீதிபதி ஆர். சக்திவேல், “போலீஸ்காவலில் இருந்த ராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது, ராஜாவின் மரணம் தொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலங்களை போலீஸார் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்காதது போன்றவைசந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே புதைக்கப்பட்ட ராஜாவின் உடலை தோண்டியெடுத்து, உரிய விதிகளைப் பின்பற்றி சென்னை மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்டு மறுபிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்
மேலும், ராஜாவின் மரணம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த தமிழக அரசின் உள்துறை செயலர், வடக்கு மண்டல ஐஜி, விழுப்புரம் டிஐஜி, எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, “விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஏப்.9 முதல் 11-ம் தேதி வரை கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை பாதுகாக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலைவில் விழுப்புரம் முக்தி அருகே உள்ள நகராட்சி இடுகாட்டில் புதைக்கப்பட்ட ராஜாவின் உடலை மருத்துவர்கள் மதுரை ராமலிங்கம், சென்னை சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆட்சியர் பழனி முன்னிலையில் இன்று தோண்டியெடுத்து மறு கூறாய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
அப்போது எஸ்பி தீபக் ஸ்வாட்ச், குற்றவியல் நடுவர் ராதிகா, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிரேத பரிசோதனை நடைபெறும் பகுதிக்கு செல்ல ஊடகத் துறையினருக்கு தடை விதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.