பாதுகாப்பான பயணத்துக்கு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஆட்சியின்போது, சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் சீரழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

அதிமுக ஆட்சி காலங்களில், சேவைத் துறையாக, லாபநஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும் போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர்.

திமுக ஆட்சி ஏற்பட்ட இந்த 36மாதங்களில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும், இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை.

அதேபோல், சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர, இதுவரை ஒரு பேருந்துகூட வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஓட்டை - உடைசல் பேருந்துகள் இயக்கப்பட்டு, மக்களின் உயிரோடு அரசு விளையாடி வருகிறது. மலைப் பிரதேசங்களிலும், நகரப் பகுதிகளிலும் பிரேக் டவுன் ஆகி நிற்கும் பேருந்துகளை பயணிகள் தள்ளிச் செல்லும் காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன.

எனவே, உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். நிதி பற்றாக்குறை என திரும்பச் திரும்ப சொல்லாமல், வாங்கிய ரூ.3 லட்சம் கோடி கடனில் புதிய பேருந்துகள் வாங்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

மக்களின் உயிருடன் விளையாடாமல், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்கவும் வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in