Published : 28 Apr 2018 09:09 PM
Last Updated : 28 Apr 2018 09:09 PM

மாநில அரசுக்கு தகவல் இல்லை; டெல்டா மாவட்டங்களில் சிஆர்பிஎப் போலீஸ் திடீர் குவிப்பு: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த திட்டம்?

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்கு அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை ராணுவம் என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் டெல்டா மாவட்டங்களுக்கு திடீரென வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மத்திய போலீஸ் படையினர் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மத்திய போலீஸ் படை எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்களிடம் எந்த உதவியும் இதுவரை கேட்கவில்லை’ என்றனர்.

இதுகுறித்து மத்திய உளவுத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன் எடுக்க புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகாரிகளும், பெரிய அளவிளான இயந்திரங்களும் வரவழைக்கப்பட உள்ளன.

இந்த நேரத்தில் கட்டாயம் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, தமிழக போலீஸாரின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருக்காமல் மத்திய போலீஸ் படை பாதுகாப்பும் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால்தான் மத்திய போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியபோது, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

மத்திய போலீஸ் படையின் டிஎஸ்பி இளம்பரிதி தலைமையில், ஆய்வாளர் சுபாஷ் முன்னிலையில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஆனால் தற்போது கூடுதலாக மத்திய போலீஸார் குவிக்கப்பட்டிருப்பது தமிழக போலீஸாருக்கு தெரிந்திருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x