Published : 22 May 2024 05:50 AM
Last Updated : 22 May 2024 05:50 AM
சென்னை: பிராட்வேயில் ரூ.823 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம் எப்படி அமைகிறது என்பதை விளக்கும் மாதிரி வடிவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னையின் மிகப் பழமையான பேருந்து நிலையம் பிராட்வே பேருந்து நிலையமாகும். முன்பு தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கான பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்பட்டன.
அதன்பின் 2002-ல் கோயம்பேடுக்கு தொலை தூர பேருந்துகள் மட்டும் மாற்றப்பட்டன. இதையடுத்து, மாநகர பேருந்துகள் மட்டும் பிராட்வேயில் இருந்து இயக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
இதையடுத்து, கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘பிராட்வேயில் ரூ.823 கோடியில் நவீன வசதிகள் கொண்ட மல்டி மாடல் பேருந்து முனையம் கட்டப்படும்’’ என அறிவித்தார்.
மேலும், பேருந்து நிலையம், அருகில் உள்ள குறளகத்தையும் இடித்து, புதிய மல்டிமாடல் இன்டகரேசன் என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம், பன்னடுக்கு வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் 9 தளங்கள் கொண்ட வணிக வளாகமும் அமைகிறது. குறளகம் இடிக்கப்பட்டு அதிலும் 10 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.
புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் 2 தளங்கள் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட உள்ளன. இதையடுத்து, விரைவில் பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், தற்போது பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடங்களுக்கான மாதிரி வடிவ புகைப்படம் வெளியாகியுள்ளது. பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலை பாணியில் வெளியாகியுள்ள இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதன் அடிப்படையில் பேருந்து முனைய பணிகள் நடைபெறும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT