

சென்னை: பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று (மே 22) பவுர்ணமி என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வழக்கத்தைவிட கூடுதலானோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று வழக்கமான பேருந்துகளுடன் 330 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 ஏசி பேருந்துகள் சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in என்னும் இணையதளம் அல்லது tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.