

ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தென்னிந்தியா வில் சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இரண்டே மையங்கள்தான் இருக்கின்றன. இதனால், அவர்கள் தேர்வு எழுது வதே மிகப் பெரிய சவாலாக உள்ளது.
ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையில் 145 துணை மையங்களில் 61,003 பேர் தேர்வு எழுத விண்ணப்பித் திருந்தனர். தமிழகத்தில் மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது.
இவர்களில் பார்வையற்ற 309 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு எழுத கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் எம்.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஒரே ஒரு மையம் மட்டுமே இருப்பதால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதுவது மிகவும் சிரமமான காரியமாகும். எனவே 309 பேரில் 88 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொது அறிவுத் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி தேர்வும் நடைபெற்றது. முழுவதுமாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் வழங்கப்பட்டன.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு தேர்வு எழுத வந்திருந்த நிதின் ஜெயந்த் (23) கூறுகையில், “பெங்களூரில் தேர்வு மையம் இல்லாததால் இங்கு வந்தேன். தேர்வு எழுத உதவியாளர் மற்றும் எனது தந்தையுடன் வந்துள்ளேன். தேர்வு நேரத்தில் இவ்வளவு தூரம் பயணம் செய்வதால் நேரம் விரயமாகிறது” என்றார்.
நிதின் ஜெயந்த்-ன் தந்தை மஹாவீர் ஜெயந்த் கூறுகையில், “எனது 2 மகன்களுக்கும் பிறவியிலேயே பார்வை இல்லை. ஒருவன் சட்டம் முடித்து பணியில் இருக்கிறான். மற்றொருவன் ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறான். பார்வையற்றவர்கள் அனைவரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதால், அனைவருக்கும் தரை தளத்தில் இடம் இல்லை. எனவே, சில மாணவர்கள் சிரமப்பட்டு முதல் தளத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது” என்றார்.
இது குறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என்.தீபக் கூறியதாவது:
இது மாற்றுத் திறனாளிகளை பாரபட்சம் காட்டி ஒதுக்கும், தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கும் செயலாகும். தான் பழகிய ஊரில், தனது மாநிலத்தில் ஒருவரை தேர்வு எழுத விடாமல், மற்ற ஊருக்கு அனுப்புவது அசௌகரியத்தை ஏற்படுத்து. ஐநா சபையின் மாற்றுத் திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் 2007-ம் ஆண்டில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும்.
அவர்களுக்கான நியாயமான இடமளிக்க வேண்டும். ஆனால், இதுபோல குறைந்த எண்ணிக்கையிலான தனி தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் மற்ற பகுதியினரிடம் பழக முடியாமல், அவர்களின் ஊக்கமும், வழிகாட்டுதலும் இல்லாமல் போக வழி ஏற்படும் என்றார்.