

சென்னை: “தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 38 இடங்களில் கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், அதற்கடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும், 22 மற்றும் 23-ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நாளை (மே 22) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள்,மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
எனவே, அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மே 23ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.