Published : 09 Apr 2018 07:54 AM
Last Updated : 09 Apr 2018 07:54 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்துவோம்: தஞ்சாவூரில் நடைபெற்ற பயணத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பாதகம் ஏற்பட்டால் உரிமை மீட்புப் பயணம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்பு பயணம் நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பில் தொடங்கியது.

ஜீயபுரம், சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், தஞ்சாவூர் சாலை வழியாக பால்பண்ணை புறவழிச்சாலை, முல்லைக்குடி, வேங்கூர் வழியாக இரவு கல்லணையில் நிறைவடைந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் பேசினர். இந்த பயணத்தில் 88 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

காவிரி உரிமை மீட்பு 2-ம் நாள் பயணம் நேற்று தஞ்சாவூரை அடுத்த சூரக்கோட்டையில் இருந்து நேற்று காலை தொடங்கியது. ஸ்டாலின் சிறிது தூரம் நடந்து சென்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். பின்னர், ஸ்டாலின் வாகனத்தில் ஏறி, காசவளநாடு புதூர் சென்றார். அங்கு சிறிது தூரம் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நடந்து சென்றனர். மாலையில், பட்டுக்கோட்டையில் இருந்து தொடங்கிய பயணம், மன்னார்குடி சாலை வாண்டையார் இருப்பில் நிறைவடைந்தது.

தொண்டராம்பட்டு என்ற இடத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு 9-ம் தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒருவேளை பாதகமாக வந்தால், இந்த பயணம் தமிழகம் முழுவதும் நடைபெறும். போராட்டம் தீவிரமடையும்” என்றார். தஞ்சை மாவட்டம் சில்லத்தூரிலும் அவர் பேசினார்.

இன்று 3-வது நாள் பயணம்

தஞ்சாவூர் மாவட்ட வடக்கு எல்லையான அன்னப்பன்பேட்டையில் இருந்து இன்று காலை 3-வது நாள் பயணத்தை ஸ்டாலின் தொடங்குகிறார். மெலட்டூர், திருக்கருகாவூர், களஞ்சேரி, சாலியமங்கலம், அருந்தவபுரம், வழியாக அம்மாபேட்டையில் பயணத்தை நிறைவு செய்கிறார்.

நாளை (ஏப்.10) திருவாரூரில் இருந்து புறப்படும் மு.க.ஸ்டாலின் திருத்துறைப்பூண்டி வழியே நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். 11-ம் தேதி காலை 8 மணிக்கு வேளாங்கண்ணி பிரிவு சாலையில், தொடங்கி வைத்தீஸ்வரன்கோவிலில் பயணத்தை நிறைவு செய்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார். 12-ம் தேதி காலை 8 மணிக்கு சீர்காழி, புத்தூர், கொள்ளிடம் ஆகிய இடங்களில் பேசுகிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து கடலூர் மாவட்டம் வல்லம்புதூர் செல்கிறார்.

2-வது குழு இன்று பயணம்

காவிரி உரிமை மீட்புக்கான 2-வது குழுவின் பயணம் அரியலூரில் இன்று (ஏப்.9) தொடங்குகிறது.

இப்பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் பயணத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி அரியலூரில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, பயணத்தை தொடங்கும் குழுவினர், இரவு அரியலூரிலேயே தங்குகின்றனர். பின்னர், நாளை (ஏப்.10) காலை 7 மணிக்கு மீண்டும் அரியலூரில் தொடங்கும் நடைபயணம் கீழப்பழுவூர், திருமானூர், திருவையாறு, அய்யம்பேட்டை, பாபநாசம் வழியாக சென்று கும்பகோணத்தில் நிறைவடைகிறது.

ஏப்.11 அன்று காலை 8 மணிக்கு கும்பகோணத்தில் தொடங்கி திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, தலைஞாயிறு, மணல்மேடு, முட்டம் வழியாக காட்டுமன்னார்குடியில் நிறைவடைகிறது. ஏப்.12-ம் தேதி காலை 8 மணிக்கு காட்டுமன்னார்குடியில் தொடங்கி லால்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் சென்று முக்கொம்பில் இருந்து வரும் பயணக்குழுவுடன் இணைந்து கடலூர் சென்றடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x