Published : 21 May 2024 06:15 AM
Last Updated : 21 May 2024 06:15 AM
சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகத் திகழும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், அதன்பின் அந்த ஆற்றிலிருந்து அமராவதி ஆற்றுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது. எனவே கேரள அரசைத் தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழக அரசு எச்சரிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைக் கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் தடைபட்டு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் கேரள அரசின் செயலை தமிழக அரசு கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டி தமிழகத்தின் பிரதான அணையான அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழகத்தில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அமராவதி அணை குறுக்கே அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு பெரிய தடுப்பணை கட்டிவிட்டால் அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டு விடும். கேரள அரசின் இந்த மனிதநேயமற்ற நடவடிக்கையால் இருமாநில உறவில் விரிசல் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT