Published : 21 May 2024 05:45 AM
Last Updated : 21 May 2024 05:45 AM

134-வது பிறந்தநாள் கொண்டாட்டம் | ‘கர்னாடக இசையை ஜனநாயகப்படுத்தியவர்’ - அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு புகழாரம்

சென்னையில் நடந்த அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் 134-வது பிறந்த நாள் விழாவில் பேசுகிறார் அவரது சீடர் ஆலப்புழா வெங்கடேசன்.

சென்னை: அரியக்குடி இசை அறக்கட்டளை, ஹம்ஸத்வனி ஆகிய அமைப்புகள் சார்பில் கர்னாடக இசை மேதை அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் 134-வது பிறந்தநாள், சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கத்தில் கடந்த 19-ம் தேதி கொண்டாடப்பட்டது.

அரியக்குடியின் சீடரும், மூத்த கர்னாடக இசைக் கலைஞருமான ஆலப்புழா வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: 20, 21-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை மேதையாக திகழ்ந்தவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார். கர்னாடக இசையை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்தார். கர்னாடக இசையின் மாண்பை குறைக்காமல், அதை ஜனநாயகப்படுத்திய பெருமைக்கு உரியவர்.

“அரியக்குடியின் இசை என்பது தவம். அரியக்குடியின் இசையை தவம்போல செய். 60 வயதிலும் உன்னால் பாடமுடியும்” என்று, பிரபல மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யர் எனக்கு அறிவுறுத்தினார். அவரது வாக்குப்படி, தற்போது 72 வயதிலும் கச்சேரியில் நான் பாடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அஷ்வத் நாராயணன் (பாட்டு), அக்கரை சொர்ணலதா (வயலின்), பர்வீன் ஸ்பார்ஷ் (மிருதங்கம்), எஸ்.கிருஷ்ணா (கடம்) ஆகியோரது கர்னாடக இசை நிகழ்ச்சி நடந்தது.

தற்போது கச்சேரிகளில் பாடப்படும் கர்னாடக இசை முறையை வகுத்துக் கொடுத்தவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார். அவரது பாணியை பரப்புவதோடு, கர்னாடக இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும் அரியக்குடி இசை அறக்கட்டளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x