

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக, தமிழக காவல் துறையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவல் துறையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமாகும்.
தமிழக காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட மகளிர் மாநாடுகளில் மதுவிலக்கிற்கு அடுத்தபடியாக இந்த கோரிக்கையைத் தான் நான் அதிக அளவில் வலியுறுத்தியுள்ளேன்.
சட்டமன்றத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் இதை பல முறை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த யோசனையை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தாத நிலையில், குஜராத் மாநிலத்தின் பெண் முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல் அவரது மாநிலத்தில் செயல்படுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, பா.ம.க. அப்போது முன்மொழிந்த யோசனையைத் தான் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இப்போது இந்தியா முழுவதும் செயல்படுத்தலாம் என வழிமொழிந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 7475 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1188 வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வன்முறைக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 41 விழுக்காடு ஆகும். இதன்படி தமிழக காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 41% இருக்க வேண்டும். ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி தமிழக காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 16.86 % மட்டுமே. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சற்று அதிகம் தான் என்ற போதிலும், அதிகரித்து வரும் மகளிருக்கு எதிரான குற்றங்களையும், வன்முறைகளையும் தடுக்க போதுமானதல்ல.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சிப் பதவிகளில் 33% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது காவல்துறை பணியில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
ஒரு பெண் முதலமைச்சராக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க போதிய எண்ணிக்கையில் பெண் காவலர்களும், பெண் காவல் அதிகாரிகளும் அதிகாரிகளும் இல்லை. இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருவதோ அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதோ சாத்தியமாகாது.
எனவே, தமிழக காவல்துறையில் மகளிருக்கு உடனடியாக 33% விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கான சட்டமுன்வடிவை சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.