

சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், காய்கறி விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை நிலவரத்தை தோட்டக்கலை துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும், நீர் பற்றாக்குறை, கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களாய் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் வரத்து குறைந்து, காய்கறி விலை கடுமையாக உயரும். கடந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஜூன் மாதம் கடும் வெயில் வாட்டிய நிலையில், தமிழகத்துக்கு அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்து அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோர பகுதிகளில் தக்காளி பயிர்கள் அழிந்தன. அதனால் தக்காளி வரத்து குறைந்து, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.150, சில்லறை விலையில் ரூ.190 என வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.
அதேபோல, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தில் முதல் வாரம் வரையிலும் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. தற்போது மே மாதத்தில் வரலாறு காணாத வகையில் கோடை மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 18-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. 2 நாட்களுக்கு தமிழகத்துக்கு ரெட் அலர்ட் மற்றும் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
கடும் வெயில் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அழியவும், பூக்கள் உதிர்ந்து காய்ப்பு திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால், காய்கறி விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலையில் கணிசமாக பெரிய மாற்றம் ஏதும் இல்லை. கடந்த வாரம் கிலோ ரூ.21-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.30 ஆக சற்று விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக கிலோ ரூ.10-க்குள் விற்கப்படும் முட்டைக்கோஸ், முள்ளங்கி, நூக்கல் ஆகிய காய்கறிகள் முறையே ரூ.12, ரூ.20, ரூ.25 என சற்று அதிகரித்துள்ளது.பீன்ஸ் ரூ.120, அவரைக்காய் ரூ.60, புடலங்காய் ரூ.40, பாகற்காய் ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, பீட்ரூட் ரூ.30, கேரட் ரூ.30, கத்தரிக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.18-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கடும் வெயில், மழை இருந்தாலும் காய்கறிகள் வரத்து பாதிக்கப்படவில்லை. அதனால், சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் காய்கறி விலை கடுமையாக உயரவில்லை. வரும் நாட்களில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக காய்கறி விலை உயரக்கூடும்” என்றனர்.
காய்கறி விலை நிலவரம் கண்காணிப்பு குறித்து தோட்டக்கலை துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, “தோட்டக்கலை துறை அதிகாரிகள் தற்போது தினமும் காலையில் முதல் வேலையாக கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, நெல்லூர் உள்ளிட்ட சந்தைகளில் காய்கறி விலையை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் பிறகே மற்ற பணிகளை மேற்கொள்கின்றனர். தற்போது வெப்பத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்டக்கலை துறை சார்பில் நிழல் தரும் வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காய்கறி விலையில் வழக்கத்துக்கு மாறாக திடீர் விலை உயர்வு எதுவும் இதுவரை இல்லை. எனினும், விலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.