Published : 20 May 2024 05:56 AM
Last Updated : 20 May 2024 05:56 AM

உதயநிதி ஆதரவாளர்கள் இருக்கும் வகையில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை அதிகரிக்கும் திமுக

சென்னை: இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திமுகவை பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. அதிகபட்சம் 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்டங்கள் அமைகின்றன. பெரும்பாலும், மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என மூத்த நிர்வாகிகள் செயலாளர்களாக உள்ளனர். அந்தந்த மாவட்ட அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சிப் பணிகளை மேற்கொள்வது, தேர்தலின்போது அதற்கான பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், 2026-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலுக்கு ஏற்ப கட்சியை வலுப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

மேலும், இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை கட்சியின் அனைத்து நிலைகளிலும் அதிகரிக்கும் முயற்சியாக, நிர்வாகிகள் மட்டத்தில் மாற்றம் கொண்டுவர இப்போதிருந்தே நடவடிக்கைகளை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கெனவே, அவர் மக்களவை தொகுதிகளில் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆலோசனைக் கூட்டங்களின் போதே தெரிவித்திருந்தார். இதன்படி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சியில் ஜூன் 4-ம் தேதிக்குப் பின் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

குறிப்பாக, சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிப்பது, தேர்தல் முடிவு அடிப்படையில் மாவட்டங்களை பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், 2 அல்லது 3 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக புதிய மாவட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்கள் எண்ணிக்கை உயரும்போது, அவற்றுக்கான மாவட்ட செயலாளர்பதவிகளில், இளைஞரணியில் சிறப்பாக செயல்படும் மாவட்ட செயலாளர்களை கொண்டு நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, மாவட்ட செயலாளர்களில் வயதானவர்கள், சிறப்பாக செயல்படாதவர்கள், குற்றச்சாட்டு அதிகம் உள்ளவர்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்கவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “பல்வேறு குழுக்கள், உளவுத்துறை அறிக்கைகள் அடிப்படையில் ஏற்கெனவே மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியானதும் அவை ஒப்பிடப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முன்னதாக, தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையிலும் மாற்றங்கள் இருக்கும் என நம்புகிறோம். புதியவர்கள் வரும் பட்சத்தில் அரசுத்துறை நிர்வாகத்திலும் மாற்றங்கள் ஏற்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x