Published : 20 May 2024 05:30 AM
Last Updated : 20 May 2024 05:30 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே உள்ள பாதையில் உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
.இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல்பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
600-க்கும் மேற்பட்ட தூண்கள்: குறிப்பாக, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பகுதியில் தற்போதுவரை 600-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர்இடையே உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இப்பணி அண்மையில் தொடங்கியது. தற்போது, இந்தப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லி - போரூர் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவுவதிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஆகஸ்டில் பரிசோதனை: ரயில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக, பூந்தமல்லியில் மெட்ரோ பணிமனை அமைக்கப்பட உள்ளது. இங்கு பெரும்பாலான உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அடுத்து, இது தொடர்புடைய மற்ற பணிகள் தொடங்கப்படும். வரும் ஆகஸ்டில் மெட்ரோ ரயில்கள் வரும்போது, பரிசோதனைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT