

கோவளம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்டவற்றில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருகிறது.
நவீன வசதிகள் கொண்ட, விலை உயர்ந்த பைக்கில் வரும் இளைஞர்கள், இலக்கு ஒன்றை நிர்ணயித்து, அதை குறைவான நேரத்தில் கடப்பது தொடர்பாக பந்தயம் கட்டி ரேஸில் ஈடுபடுகின்றனர். அதிவேகத்தில், பலத்த சப்தத்துடன் சீறிப் பாயும் பைக்குகளால், பிற வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், சில நேரங்களில் விபத்துகளும் நேரிடுகின்றன.
பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் தர் தலைமையில், ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீஸார் கோவளம் அடுத்த குன்னுக்காடு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்குகளில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் பிடித்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, எச்சரித்து அனுப்பினர்.