அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்: போக்குவரத்து ஓய்வூதியர் கோரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலர், போக்குவரத்து செயலர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஆகியோரை அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க துணைச் செயலாளர் என்.லோகநாதன், சென்னை மண்டலத் தலைவர் ஏ.அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்மையில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் அவரால் வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை பெற்று ஆயிரக் கணக்கானோர் வாழ்ந்து வருகிறோம்.

இந்த ஓய்வூதியத்தில் அவ்வப்போது உயரும் அகவிலைப்படியை 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிதிநிலையை காரணம் காட்டி வழங்கவில்லை.

7 ஆயிரம் பேர்.. தற்போது வரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். குறைவான ஒய்வூதியம் (ரூ.5,000-6000) பெறுவோரும் பல்வேறு நோய்களுக்கு இடையே வறுமையில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பணப்பலன்களை நம்பி மகளின் திருமணம், மகன் கல்வி, வீடு கட்ட வாங்கிய கடன் போன்றவற்றை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, எங்கள் சூழலை உணர்ந்து அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in