

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மரணமடைந்தார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரியாஸ்கான்(62). தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் மற்றும் இவருடன் பணியாற்றி ஓய்வுபெற்ற நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜகோபால் (61), செல்வம் (62), திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (68) ஆகியோர் நாகர்கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் மாலை அவர்கள் நாகர்கோவில் உலக்கை அருவி அருகே பெருந்தலைக்காடு துவச்சி கால்வாயில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அருவியின் கீழ் பகுதியில் இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ரியாஸ்கான் உட்பட 4 பேரையும் இழுத்துச் சென்றது.
இதை பார்த்ததும் அருகே குளித்துக் கொண்டிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு ராஜகோபால், செல்வம், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் மீட்டனர். ஆனால் ரியாஸ்கானை மீட்க முடியவில்லை.
பூதப்பாண்டி போலீஸார் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடியும் ரியாஸ்கான் கிடைக்கவில்லை. நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மாலை அவரது உடல் மீட்கப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.