Published : 20 May 2024 06:18 AM
Last Updated : 20 May 2024 06:18 AM
சென்னை: கூடுதலான எண்ணிக்கையில் பழங்குடி மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெ.சண்முகம், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நடப்பாண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அரசு உண்டு - உறைவிட பள்ளிகளில் மட்டும் தேர்வெழுதிய 1,245 மாணவர்களில் 1,171 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதர அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்களையும் கணக்கில் கொண்டால் அதிகப்படியான பழங்குடி மாணவர்கள் உயர்கல்வி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
1200 இடங்கள்: ஆனால் தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் பழங்குடி மாணவர்களுக்கு 1,200 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் பல பாடப்பிரிவுகளில் 50 இடங்களுக்கு மேல் இருந்தால் தான் 1 இடம் பழங்குடியினத்தவருக்கு கிடைக்கும். இதற்கு குறைவாக இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் பழங்குடி மாணவர்கள் சேரவே முடியாது.
எனவே, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அளவில் பழங்குடியினத்தவருக்குரிய மொத்த இடங்களும் நிரப்பப்படுவது அவசியம். அதற்கு பழங்குடி மாணவர்களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வரும் கல்லூரிகளுக்கு, போதுமான விண்ணப்பங்கள் வராத கல்லூரிகளுக்கான இடங்களையும் அளித்து கூடுதலான எண்ணிக்கையில் பழங்குடி மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை அதிகரிப்பு: குறிப்பாக சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தேவை அதிகரித்துள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT